மோசடி குறுஞ்செய்திகளைத் தடுக்க TRAI ஒழுங்குமுறை நடவடிக்கை... வணிக நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி?

தேவையில்லாத மார்க்கெட்டிங் குறுஞ்செய்திகளில் இருந்து மோசடி செய்வதற்காக அனுப்பப்படும் குறுஞ்செய்திகள்வரை, அனைத்திற்குமான ஒழுங்குமுறையைக் கொண்டு வருகிறது டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India).

கடந்த திங்கட்கிழமை, நீங்கள் ஏதாவது பணப்பரிமாற்றம் அல்லது இணையத்தில் ஷாப்பிங் செய்துவிட்டு OTP-க்காக காத்திருந்தால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். டிராய் குறுஞ்செய்திகளுக்கான ஒழுங்குமுறையை திடீரென அமல்படுத்தியதால் உண்டான குழப்பம் இது. தனிப்பட்ட முறையில் நாம் அனுப்பும் அல்லது பெறும் குறுஞ்செய்திகள் இல்லாமல் வணிக ரீதியாகத் தினமும் 100 கோடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவற்றில் நாம் பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தும் OTP-ல் இருந்து, மோசடிக்காக அனுப்பப்படும் ஏமாற்றுக் குறுஞ்செய்திகள் வரை அனைத்தும் அடங்கும். இதில் நமக்குத் தொல்லை தரும் மார்க்கெட்டிங் குறுஞ்செய்திகளும் அடங்கும். இது குறித்து பயனர்கள் பல காலமாகவே முறையிட்டு வருகிறார்கள்.

வணிக ரீதியான குறுஞ்செய்திகள்

2018-ல் Telecom Commercial Communications Customer Preference Regulation (TCCCPR) என்ற ஒழுங்குமுறையை அமல்படுத்தியது டிராய். அதன்படி, பயனர்கள் தாங்கள் தேவையில்லை என நினைக்கும் குறுஞ்செய்திகளைத் தடுக்கும் வசதியும் அளிக்கப்பட்டது. 2018-ல் கொண்டுவரப்பட்ட இந்த முறைப்படி, மொபைல்களில் பயனர்கள் எந்தெந்த குறுஞ்செய்திகளைப் பெற விரும்புகிறார்கள் என்ற பட்டியல் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருக்கும். மேலும், வணிகரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள், தாங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் என்ன வகையான குறுஞ்செய்திகளை அனுப்பும் என்பது குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இவற்றைச் சரிபார்த்து வணிக நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட எண்ணில் இருந்து தான் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனவா, அவை பதிவு செய்துள்ளபடியான தகவல்களைத்தான் அனுப்புகின்றனவா மற்றும் பயனர்களின் விருப்பம், இவை அனைத்தையும் சரி பார்த்த பிறகே ஒரு குறுஞ்செய்தி குறிப்பிட்ட பயனரை அடையும். இவற்றில் ஒன்று சரியாக இல்லை என்றாலும் அந்தக் குறுஞ்செய்தியை தொலைத் தொடர்பு நிறுவனமே தடை செய்யும், அது பயனர்களை அடையாது. இந்த முறையைப் பின்பற்றினால் தேவையில்லாத மற்றும் மோசடி செய்யக்கூடிய வகையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளைத் தடுக்க முடியும். மேலும் இந்த முறை குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே, அழைப்புகளுக்குக் கிடையாது. எனவே, மோசடி/தேவையில்லாத அழைப்புகள் (Spam) உங்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கும்.

Paytm

2018-லேயே இந்த முறை அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் தீவிரமாக இதனை டிராய் அமல்படுத்தவில்லை என பேடிஎம் (Paytm) நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், TCCCPR முறையைத் தீவிரமாக அமல்படுத்தக் கூறி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, வணிக ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள் அது குறித்த தகவல்களை உடனடியாகப் பதிவு செய்யும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பை அனுப்பியிருந்தது டிராய்.

கடந்த திங்கள்கிழமை, அப்படிப் பதிவு செய்யாத நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் TCCCPR முறைப்படி தடை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல வங்கி மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட, இந்த TCCCPR முறை ஏழு நாள்களுக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது. அதற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் எந்த வகையான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் போன்ற தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இது குறித்து தெளிவை ஏற்படுத்தவும் கூறியுள்ளது டிராய்.Post a Comment

0 Comments