சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் தனி சாம்ராஜ்யம் நடத்துகிறது. பயனர்களைத் தக்கவைக்க புதிதாகப் பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் ஃபேஸ்புக், அது சார்ந்த விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுயாதீன எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான புதிய செய்திமடல் (Newsletters) தளம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்தி, கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்குதல், புதிய விஷயங்கள் குறித்த அறிவிப்புகள், சந்தா சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஊடகங்கள் செய்திமடல்களைப் பயன்படுத்துகின்றன. ஒப்பீட்டளவில் ஊடகங்களைவிட, தனிநபர்கள் செய்திமடல்கள் வெளியிடுவது சமீப காலம்வரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது. ஆனால், இந்தக் கொரோனா காலத்தில் உலகம் முழுக்க எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தனிநபர்களும்கூட செய்திமடல்கள் எழுதத் தொடங்கியது Substack போன்ற செய்திமடல் தளங்களைப் பரவலடையச் செய்தது.

எந்தத் தணிக்கையும் இன்றி, கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு இந்தச் செய்திமடல்கள் வழிசெய்கின்றன. இதனால், வெகுஜன ஊடகங்கள் இடமளிக்காத தீவிரமான விஷயங்களைப் பேச உலகம் முழுக்கச் சுயாதீன எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் இந்தச் செய்திமடல்களைக் கையிலெடுத்தனர். வாசகரை நேரடியாகச் சென்றடைவதும், சந்தாத் தொகை எந்தத் தடங்கலும் இன்றி வாசகரிடமிருந்து நேரடியாக எழுதுபவருக்குச் சென்றடைவதும் இந்தச் செய்திமடல் தளங்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.
கொரோனா நெருக்கடியால் பணியிழந்த மேற்குலக முன்னணி ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் சிலர், செய்திமடல்களை உடனடியாகத் தொடங்கி எழுத்து ரீதியாகவும், வணிகரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றனர். நேரடிப் பணியில் பெற்ற ஊதியத்தைவிட, மிக அதிகத் தொகையை இந்தச் செய்திமடல்கள் ஈட்டித் தருவதாக இந்தப் பத்திரிகையாளர்களில் சிலர் சொல்கின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் ஃபேஸ்புக் செய்திமடல் தளம் ஒன்றைத் தொடங்கவிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இலவசமாக மின்மடல், தனி தளங்கள் தொடங்குதல், ஃபேஸ்புக் பக்கங்களுடன் ஒருங்கிணைப்பு, ஃபேஸ்புக் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் எழுத்தாளர்-வாசகர் பிணைப்பை மேம்படுத்துதல், வாசகர்கள் எழுத்தாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் வசதிகள், தங்கள் எழுத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை எழுத்தாளர்கள் துல்லியமாக அறியும் தொழில்நுட்ப வசதிகள், சந்தா மூலம் சம்பாதித்தல் என இதுகுறித்த மிக விரிவான ஒரு திட்டத்தை ஃபேஸ்புக் முன்வைத்திருக்கிறது.
வருகிற மாதங்களில், முதலில் அமெரிக்காவில் இத்திட்டத்தை பேஸ்புக் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இதற்கிடையே Revue என்ற செய்திமடல் கருவியை ட்விட்டர் சமீபத்தில் கையகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment