கொரோனா தடுப்பு மருந்துத் தகவல்களைத் திருடுவதற்காக சைபர் தாக்குதல்... பின்னணியில் சீனா?

இந்திய கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களைக் குறி வைத்து சைபர் தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக சிங்கப்பூரில் இயங்கிவரும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைபிர்மா (Cyfirma) தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா (Corona) தடுப்பூசி ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. அதிலும், உலகில் விற்பனையாகும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. சீனாவைச் சேர்ந்த நிறுவனமான APT10, இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பாரத் பயோடெக் (Bharath Biotech) மற்றும் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) ஆகிய நிறுவனங்களில் சைபர் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது என சைபிர்மா தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி மட்டுமல்லாது வேறு சில தடுப்பு மருந்துகளுக்காகவும் சீரம் நிறுவனத்தை APT10 என்ற சீன நிறுவனம் சில ஆண்டுகளாகவே குறிவைத்து வருவதாகவும் நிறுவனத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புமருந்து

இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க முடியாது என Indian Computer Emergency Response Team தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இந்தச் சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. APT10 நிறுவனம் சீன அரசுடன் சேர்ந்தே இயங்கி வருவதாக 2018-ல் அமெரிக்காவின் நீதித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்களைத் திருடுவதற்காக, பல சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்தாண்டு நவம்பரில் தடுப்பு மருந்துகள் தொடர்பான தகவல்களைத் திருவதற்கு ரஷ்யா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தியதாகத் தெரிவித்திருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

கடந்த டிசம்பர் மாதத்திலும் அமெரிக்காவைச் சேர்ந்த Pfizer மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த BioNtech SE ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Post a Comment

0 Comments