'எனக்கா எண்டு கார்டு?'- ட்விட்டர், ஃபேஸ்புக் போலவே புதிய சமூக வலைதளத்தை உருவாக்கும் அதிபர் ட்ரம்ப்!

கடந்த ஜனவரி 6-ம் தேதி, அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிட்டலில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர் ட்ரம்ப் ஆதரவாளர்கள். இந்தத் தாக்குதலுக்கு ட்ரம்ப்தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு செனட் சபையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதே சமயம் வன்முறையைத் தூண்டுகிறார் எனக் கூறி, ட்ரம்ப்பின் கணக்குகளை முடக்கின ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இதர சமூக வலைதளங்கள்.

டொனால்ட் ட்ரம்ப்

இதனால், அடுத்த மூன்று மாதங்களில் ஒரு புதிய சமூக வலைதளத்தை ட்ரம்ப்பே உருவாக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ட்ரம்ப்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்திருப்பதாவது, "தனக்கான புதிய சமூக வலைத்தளத்தை ட்ரம்ப் உருவாக்கவிருக்கிறார். இதன் மூலம் சமூக வலைதளங்களுக்கு இடையேயான போட்டியில் திருப்புமுனைகள் உருவாகும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த வாரம், அரசியல் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து பயனர்களின் கருத்துகளை ட்விட்டர் கேட்டிருந்தது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியதும், அதன் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகப் பயனர்களின் கருத்துக்களைக் கேட்டிருக்கிறது ட்விட்டர். அதில், சராசரி பயனர்களின் கணக்குகளைப் போலவே அரசியல் தலைவர்களின் கணக்குகளையும் கையாளலாமா எனக் கேட்டிருக்கிறது.

Trump twitter ban

ட்விட்டரைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய ஃபேஸ்புக், ட்ரம்ப்பின் கணக்கு முடக்கப்பட்டிருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதனை தங்கள் நிறுவனத்தின் மேற்பார்வைக் குழு முடிவு செய்யும் எனத் தெரிவித்திருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருடன் யூடியூபும் ட்ரம்ப்பின் கணக்கை தங்கள் தளத்தில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் குறித்த அச்சுறுத்தல் குறைந்ததும் அவர் கணக்கின் மீதான தடை நீக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனால்தான் எவ்வித விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத வகையில் தனக்கே தனக்காக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்கயிருக்கிறார் ட்ரம்ப் என்கின்றனர்.Post a Comment

0 Comments