சமூக வலைதளங்களில் இது புதுசு... ஆடியோவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கிளப்ஹவுஸ்!

சமூக வலைதளத்தில் புதிய வரவு கிளப்ஹவுஸ் (Club House). அமெரிக்காவைச் சேர்ந்த பால் டேவிட்சன் மற்றும் ரோகன் ஷெத் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது இந்த கிளப்ஹவுஸ். இதன் ஐஓஎஸ் செயலி மட்டுமே தற்போது வெளியாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் தற்போதுதான் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் இந்த செயலி உலக அளவில் பிரபலம்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்காக மட்டுமே வெளியானது இந்த செயலி. அதுவும் எல்லோராலும் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏற்கெனவே அந்தச் செயலியைப் பயன்படுத்தும் ஒருவர் அந்த செயலிக்கான லிங்க் அனுப்பினால் மட்டுமே உங்களால் அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்படி இருந்தும் கடந்த டிசம்பர் மாதக் கணக்கின்படி, 6 லட்சம் பயனர்களைப் பெற்று அசத்தியிருக்கிறது கிளப்ஹவுஸ்.

ClubHouse

கிளப்ஹவுஸ் என்ன வகையான செயலி?

கிளப்ஹவுஸ், வீடியோ கான்பரஸிங் போல ஆடியோ கான்பரன்ஸிங்கில் கலந்துரையாடல் செய்யக்கூடிய செயலி எனச் சொல்லலாம். அதில் இணைந்திருக்கும் பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்தத் தலைப்பில் பேசப் பல குழுக்கள் இருக்கும். அதில் ஏதாவதொரு குழுவில் இணைந்து கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் பாட்கேஸ்ட், கொஞ்சம் கான்பரன்ஸ் கால், குழுவாகப் பிடித்த தலைப்பில் கலந்துரையாடுவது என அனைத்தையும் கலந்து வைத்தால் அதுதான் கிளப்ஹவுஸ். நேரலையில் மட்டுமே இந்தக் குழுக்களுடன் இணைந்து பேச முடியும். ஒரு குழு நேரலையை முடித்த பின்பு, அவை செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்காது. நாம் கான்பரன்ஸ் காலில் பேசிக் கொண்டிருக்கும் போது யாராவது இணைந்தால் அதனைக் கேட்க முடியும், ஆனால் காலைக் கட் செய்த பிறகு என்ன பேசினோம் என எந்தப் பதிவும் இருக்காதல்லவா, அதே போலத் தான் கிளப்ஹவுஸும்.

கிளப்ஹவுஸுக்கு மவுசு:

யூடியூபில் வீடியோ இண்டர்வியூ போலவே கிளப்ஹவுஸில் ஆடியோ இன்டர்வியூகள் பிரபலமாகத் தொடங்கின. கடந்த மாதம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கும், ராபின்ஹூட் மார்க்கெட்ஸின் தலைமை செயல் அதிகாரியான விளாட் டெனவ்வும் கிளப்ஹவுஸ் குழுவில் இணைந்து கலந்துரையாடினர். இது யூடியூபிலும் ஒளிபரப்பாக, கிளப் ஹவுஸுக்கான மவுசு எகிறிவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 2 பில்லியன் பயனர்களைப் பெற்றுவிட்டது கிளப்ஹவுஸ். எனினும் அது இன்னும் இன்வைட் ஒன்லி ஆப்ஷனுடன்தான் இயங்கி வருகிறது. அது மட்டுமன்றி, தொடங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை எட்டிவிட்டது இந்த செயலி.

கிளப்ஹவுஸ்

சீனாவில் தடை:

உலகம் முழுவதும் பிரபலமானதைத் தொடர்ந்து சீனாவிலும் இந்தச் செயலி பிரபலமாகத் தொடங்கியது. குறைவான காலத்திலேயே மிகவும் பிரபலமடைந்ததால் இதனைப் பற்றி அரசுக்குத் தெரியாமல் இருந்தது. அரசுக்கு இந்தச் செயலியைப் பற்றித் தெரியவில்லை என்பதால் அரசின் எந்தத் தடையும் செயலியின் மேல் இல்லாமல் இருந்தது. இதனால், சீனாவைச் சேர்ந்த பயனர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை இந்தச் செயலியில் வெளிப்படுத்தத் தொடங்கினர். முக்கியமாக ஜனநாயகம் குறித்த கருத்துக்களைச் சீன மக்கள் அதிகளவில் வெளிப்படுத்தத் தொடங்கினர். பின்னர் இந்தச் செயலி குறித்து செய்திகள் வெளியே வரக் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி சீனாவில் தடை செய்யப்பட்டது கிளப்ஹவுஸ்.

கருத்துச் சுதந்திரமும் கிளப்ஹவுஸும்:

மக்களுக்கான கருத்துச் சுதந்திரத்தைச் சிறிது காலம் கிளப்ஹவுஸ் வழங்கியிருக்கிறது எனக் கூறலாம். குறிப்பிட்ட நாடுகளில் மக்கள் தாங்கள் பேசத் தயங்கிய கருத்துக்களை கிளப்ஹவுஸ் மூலமாகப் பேசியிருக்கின்றனர். மற்ற சமூக வலைதளங்களில், நாம் என்ன செய்கிறோம் என்ற பதிவுகள் இருப்பதாலும் அரசுகள் மக்கள் என்ன பதிவிடுகிறார்கள் எனக் கண்காணிப்பதாலும் பல சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களை மக்களால் பேச முடிவதில்லை, உதாரணத்திற்குச் சீனாவைக் கூறலாம். ஆனால், கிளப்ஹவுஸ் வெளியாகி சிறிது காலமே ஆகியிருந்ததாலும், மக்கள் அதில் கலந்துரையாடிய பதிவுகளை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என்பதாலும் பயனர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துகளை அதில் பகிர்ந்திருக்கிறார்கள். சீனாவைப் போல அரபு நாடுகளிலும், முக்கியமாகப் பெண்கள் பலர் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை கிளப்ஹவுஸில் பகிர்ந்திருக்கிறார்கள். அரபு நாடுகள் இந்தச் செயலியைச் தடை செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், சரியான உரிமம் இல்லாமல் இயங்குகிறது எனக் கூறி கிளப்ஹவுஸ் செயலியைத் தடை செய்திருக்கிறது ஓமன் அரசு.

சமூக வலைதளங்கள்

கிளப்ஹவுஸ் காப்பீஸ்:

புதிதாக ஒரு சமூக வலைதள செயலி பிரபலமாகிறது எனத் தெரிந்தவுடனே மற்ற சமூக வலைதளங்களும் அதே போன்ற ஒரு சேவையைத் தங்கள் தளங்களிலும் உருவாக்கத் தொடங்கினார்கள். கடந்த மாதம் ஸ்பேஸஸ் என்ற பெயரில் கிளப்ஹவுஸ் போன்ற ஒரு சேவையை தங்கள் தளத்தில் தொடங்கியிருந்தது ட்விட்டர். அதனைத் தொடர்ந்து தற்போது டெலிகிராமும் வாய்ஸ் சேட் போன்ற வசதியை அதன் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கும் அதே போன்றதொரு வசதியை அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருக்கிறது.

அதேபோல் கிளப்ஹவுஸும், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டு தளங்களிலும் அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.


Post a Comment

0 Comments