தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் முறையைக் கைவிடும் கூகுள்... காரணம் என்ன?

தனிப்பட்ட முறையில் பயனர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் முறையைக் கைவிடுகிறோம் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.

இணையதளத்தில் விளம்பரங்களுக்கு எனச் செலவிடப்படும் தொகையில் 75 சதவிகிதம் சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்குக்கும் (Facebook), இணையதள தேடல் இயந்திரமான கூகுளுக்கும் (Google) தான் செல்கின்றன. இவை இரண்டும் பயனர்களின் தனிப்பட்ட விருப்பங்களை அறிந்து அவற்றுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட விளம்பரங்களைக் காட்டுவதில்தான் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. பயனர்களின் தனிப்பட்ட விருப்பங்களை அறிந்து கொள்ள குக்கீக்களை (Cookies) இணைய நிறுவனங்கள் உபயோகிக்கின்றன. குக்கீக்கள் என்பவை நாம் இணையத்தில் என்ன செய்கிறோம் என்ற தகவல்களைச் சேகரித்து வைக்கும் ஒரு பகுதி. நீங்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் உள் நுழைந்திருக்கிறீர்களா, அந்தத் தளத்தில் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை குக்கீக்கள் சேகரித்து வைத்துக் கொள்ளும்.

Google

நாம் ஒரு தளத்தில் நுழைந்தவுடன் குக்கீக்களை ஏற்றுக் கொள்கிறீர்களா என ஒரு பாப்-அப் தோன்றும். நீங்கள் அதனை ஏற்றுக் கொண்ட பின் அந்தக் குறிப்பிட்ட தளத்தில் எதையெல்லாம் பார்க்கிறீர்கள் என அவை சேகரித்துக் கொள்ளும். அதனை வைத்துத்தான், நீங்கள் வேறு எதையாவது பார்க்கிறீர்களா என அந்தத் தளம் உங்களுக்குப் பரிந்துரை செய்யும். இந்தக் குக்கீக்களில் இன்னொரு வகை உண்டு. மூன்றாம் தர குக்கீக்கள் (Third - party tracking cookies) என்று அழைக்கப்படும் அவை, நீங்கள் செல்லும் அனைத்து தளத்திற்கும் உங்களைப் பின்தொடர்ந்து வந்து நீங்கள் பார்ப்பவை அனைத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளும். அவற்றைக் கொண்டுதான் கூகுள் உங்களுக்கு என்ன விளம்பரங்களைக் காட்ட வேண்டும் எனத் தீர்மானம் செய்யும். இந்த வகைக் குக்கீக்களை பயன்படுத்துவதைத்தான் கூகுள் கூடிய விரைவில் நிறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறது.

Google cookies

இதற்கு முன்னர், கடந்த ஆண்டுகளில், ஆப்பிளின் சஃபாரி (Safari) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) ஆகிய தேடல் இயந்திரங்கள் இந்த முறையைக் கைவிட்டுவிட்டன. இதற்குப் பயனர்களின் விழிப்புணர்வுதான் காரணம். கூகுள் தற்போதுதான் இந்த முடிவை எடுத்துள்ளது. கூகுளின் முக்கிய மூலதனமே, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள்தான். எனவே இது கூகுளுக்கு கடினமான முடிவாகத்தான் இருக்கும். கூகுள், நிறுத்துவதாய்த் தெரிவித்திருக்கிறது என்றாலும், எப்போதிலிருந்து எனத் தெரிவிக்கவில்லை.

இந்த வகையில் பயனர்களின் தகவல்களைச் சேகரிப்பதை நிறுத்திய பின் இதற்கு நிகரான வேறொரு முறையைக் கூகுள் உருவாக்க வாய்ப்பிருக்கிறது எனப் பலர் வாதிடுகின்றனர். ஆனால், பயனர்களைத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து தகவல்களைப் பெறும் வேறொரு முறையைக் கண்டிப்பாக உருவாக்க மாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறது கூகுள்.

மேலும், கூகுள் தளங்களில் கண்டிப்பாக விளம்பரங்கள் இடம்பெறும். ஆனால், விளம்பரதாரர்கள் லாபம் அடைவது போலவும், பயனர்களின் தனியுரிமையை மீறாத வகையிலும் ஒரு முறையைக் கொண்டு வருவோம் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள். ஆனால் இது போன்ற மூன்றாம் தர குக்கீகளை நிறுத்துவதால் மட்டுமே, நம் தகவல்களை யாரும் பார்க்கவில்லை எனக் கிடையாது. கூகுள் எவ்வாறு இதனைக் கையாள்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Post a Comment

0 Comments