மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது? #NFTCrypto

நெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன்புவரை, மின்சார ஆற்றலை பற்றி யாரேனும் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்காது. ஐம்பதாண்டுகளுக்கு முன்வரை வயர்லெஸ் செல்போன் பற்றி பேசியிருந்தால் நல்ல கற்பனை என்றிருப்போம். பத்தாண்டுகளுக்கு முன் வரை டீக்கடையில் கூட ஆன்லைன் பேமென்ட் சாத்தியம் என்று சொன்னால் சிரித்திருப்போம். இப்படி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி என்பது எப்போதும் நாம் நினைப்பதை விட அபாரமானதாகவே இருக்கிறது.

பிட்காயின்

அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த ஒன்றுதான் பிளாக்செயின், பிட்காயின் போன்ற க்ரிப்டோ கரன்ஸிக்கள். இவை என்.எப்.டி சொத்துக்கள் என டிஜிட்டல் உலகம் அள்ளி இறைக்கும் புதிய தொழில்நுட்பங்கள். டாலர், யூரோ, யென், ரூபாய் என ஒவ்வொரு நாடும் தனக்கென பிரத்யேக கரன்சி வைத்திருப்பது போல டிஜிட்டல் உலகமும் தனக்கென தனி கரன்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. பிட்காயின், எத்திரியம் என இதிலும் பல வகைகள் உண்டு. இதற்குத்தான் கிரிப்டோகரன்சி என்பது பெயர். இந்த டிஜிட்டல் பணத்தை அதன் மதிப்புக்கு இணையான டாலராகவோ வேறு பணமாகவோ மாற்றி, நீங்கள் வழக்கம்போல் செலவும் செய்ய முடியும். இந்த இணைய கரன்சி, டேட்டா ஆகியவற்றின் ஒட்டுமொத்த தரவுகளையும் தொகுத்து வைத்திருக்கும் கணக்குப் புத்தகம்தான் ப்ளாக்செயின். ஒரு பணம் இருக்கிறதென்றால், அதைக்கொண்டு வாங்க பொருட்கள் இருக்கிறதல்லவா, இந்த பிட்காயின் கொண்டு இணைய உலகில் விலை அதிகமுள்ள சில விர்சுவல் சொத்துக்களை வாங்கலாம். என்.எஃப்.டி (NFT- Non Fungible Tokens) என்பது அதில் ஒருவகை. புகைப்படம், மீம், வீடியோ என ஏதாவது ஒரு டேட்டாதான் என்.எஃப்.டி. அதை அதிக கிரிப்டோகரன்சி கொடுத்து வாங்கி ஒருவர் மட்டும் சொந்தம் கொண்டாடலாம். அந்த குறிப்பிட்ட விர்ச்சுவல் சொத்து மறுஉருவாக்கம் செய்யமுடியாத, ஒரிஜினல் டேட்டா என்பதை பிளாக்செயின் உறுதிப்படுத்திக் கொடுக்கும்.

சரி இவ்வளவு எதற்கு என்கிறீர்களா? இந்த கிரிப்டோகரன்சி கொடுத்து ஒரு விர்ச்சுவல் சொத்தை வாங்குவது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் என்றில்லாமல் மில்லியன்களில் இந்த என்.எஃப்.டி-க்களின் விற்பனை நடக்கிறது.

சமீபத்தில், மிக பழைமையான லண்டன் ஏல நிறுவனமான கிறிஸ்டி'ஸ் தன் முதல் கிரிப்டோகரன்சி ஏலத்தை நடத்தியது. பிரபலமான டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் மைக் வின்கேல்மண் (@beeple) உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படம் 'Everydays: The First 5000 Days' எனும் புகைப்படம். இது, சுமார் 70 மில்லியன் டாலருக்கு (கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்) விற்பனையாகியிருக்கிறது. வெறும் ஒரு ஜேபெக் (jpeg) புகைப்படம் இவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டிருப்பது உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. @metkovan எனும் பெயரில் இருக்கும் இணைய பயனீட்டாளர் ஒருவர், எத்தீரியம் எனும் கிரிப்டோகரன்சி கொடுத்து இந்தப் புகைப்படத்தை வாங்கியிருக்கிறார். இவர், என்.எஃப்.டி எனும் இந்த இணைய சொத்துக்களை வாங்கிச் சேகரிப்பவர் என்கிறது இவரது ட்விட்டர் தகவல்கள். இவர் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது.

மைக் வின்கேல்மண் (@beeple)

மைக் வின்கேல்மண் உருவாக்கிய இந்தப் படத்தை தயாரிக்க அவர் 13 ஆண்டுகள் உழைத்திருக்கிறார். தினம் ஒரு டிஜிட்டல் ஓவியம் என இவர் கடந்த 13 ஆண்டுகளாக வரைந்த ஓவியங்களின் தொகுப்பே (collage) இந்த everydays புகைப்படம். மைக் தன்னுடைய திருமண நாள், அவருக்குக் குழந்தை பிறந்த தினம் என ஒரு நாளை கூட விடாமல் எல்லா நாட்களும் ஒரு டிஜிட்டல் ஓவியத்தை வரைந்திருக்கிறார் என்பதே இந்தப் புகைப்படத்திற்கான தனி சிறப்பு.

இதுகுறித்து புகைப்படத்தை வாங்கிய @metkovan வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "டிஜிட்டல் உலகம்தான் இனி எதிர்காலம். நீங்கள் எதை வேண்டுமானாலும் போலியாக உருவாக்கலாம். ஆனால் நேரத்தை அப்படி உருவாக்க முடியாது. இந்தப் புகைப்படம் 13 ஆண்டுகளின் உழைப்பு. என்.எஃப்.டி சொத்துக்களின் உச்சம் இந்தப் புகைப்படம். இதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலர்வரை போகும். இதை வாங்கியதில் மகிழ்ச்சி" என கூறியிருக்கிறார்.

மைக் வின்கேல்மண்

இந்த டிஜிட்டல் ஓவியத்தை வரைந்த மைக், நடந்தவற்றை விவரிக்க முடியாத மகிழ்ச்சியோடு எதிர்கொண்டிருக்கிறார். 6 மில்லியன், 7 மில்லியன் என இவரது படைப்புகள் முன்னரே வாங்கப்பட்டிருக்கின்றன. அப்படியான ஒரு கவனிக்கத்தக்க டிஜிட்டல் ஓவியர் மைக் வின்கேல்மண். "இனி உலகம் கிரிப்டோகரன்சியில் இயங்கும், கார் முதல் டீ வரை எதை வேண்டுமானாலும் கிரிப்டோகரன்சி கொண்டு வாங்க இயலும். டிஜிட்டல் உலகம்தான் எதிர்காலம்" என மகிழ்ச்சியோடு கருத்து பகிர்கிறார்.

அடுத்து என்ன 90'ஸ் கிட்ஸ்... உங்கள் கணினியில் MS Paint ஓபன் செய்து வரைய பழகுங்கள். அதை க்ரிப்டோகரன்ஸி தந்து வாங்க, 2கே கிட்ஸ் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!


Post a Comment

0 Comments