Type Here to Get Search Results !

எனும் நிழலுலகம்... மாடரேட்டர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன?

'கன்டென்ட் மாடரேஷன்' (Content Moderation) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டெக் உலகில் அதிகம் மன உளைச்சலைத் தரக் கூடிய வேலை அது தான். அப்படித்தான் அந்த வேலையைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி என்ன வேலை அது, அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

நாம் தினமும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்கும் பதிவிடும் பதிவுகள் எந்த வகையைச் சேர்ந்தவை, அவை வன்முறையைத் தூண்டும் பதிவா, சாதாரண பொழுதுபோக்குப் பதிவா, அரசியல் பதிவா, தவறான தகவலைக் குறிப்பிடும் பதிவா அல்லது மிகவும் சென்சிடிவான பதிவா எனத் தரம் பிரிக்கும் வேலைதான் கன்டென்ட மாடரேஷன். அந்த வேலையைச் செய்பவர்கள்தான் கன்டென்ட் மாடரேட்டர்கள். சரி, இந்த வேலையில் என்ன மன உளைச்சல்?

Content moderation

நீங்கள் காலையில் ஃபேஸ்புக்கில் உள்நுழைகிறீர்கள், பாலியல் வன்கொடுமை பற்றிய கட்டுரை ஒன்று நண்பர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அதனைப் படித்தபின் மனதில் என்னவெல்லாம் தோன்றும்? சில நேரத்தில் சமூகத்தின் மீதே வெறுப்பு வரும், சில நேரத்தில் சக மனிதர்கள் மீது கோபம் வரும். இப்படி ஒரு பதிவு நம் மனநிலையை மாற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இது போன்ற கட்டுரைகள் மட்டும் அல்ல, மிகவும் சென்சிட்டிவான புகைப்படங்கள், காணொளிகள் எனத் தினமும் லட்சக்கணக்கான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகின்றன. அந்த லட்சக்கணக்கான பதிவுகளையும் தரம் பிரிக்கும் போது அதில் மனிதத் தன்மையே அற்ற பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் பார்க்க நேரிடும். அதனை தரம் பிரித்து எந்த வகையைச் சேர்ந்தது என முத்திரை குத்திவிட்டு எதுவும் நடக்காதது போல அடுத்த பதிவைத் தரம் பிரிக்க வேண்டும்.

இதுதான் கன்டென்ட மாடரேஷனின் கறுப்புப் பக்கம். சமூக வலைத்தளங்களில் அந்த அளவிற்குக் கொடுமையான பதிவுகளை நான் பார்த்ததில்லையே என நீங்கள் கூறலாம். நாம் பார்க்கக்கூடாது என்பதால்தானே கன்டென்ட் மாடரேட்டர்கள் அந்த வேலையைச் செய்கிறார்கள். சமூக வலைதளங்களும் இணையம் போலத்தான். நாம் பார்ப்பது மேலே இருக்கும் ஒரு சிறு பனிக்கட்டி மட்டுமே. உள்ளே ஒரு பனிமலையே இருக்கிறது. லட்சக்கணக்கான பதிவுகளை மனிதர்களே மாடரேட் செய்வது என்பது நடக்காத காரியம். தற்போது AI-கள் கன்டென்ட் மாடரேஷன் பணிகளைப் பெருமளவு மேற்கொள்கின்றன. அதனையும் தாண்டி ஆயிரக்கணக்கான கண்டென்ட் மாடரேட்டர்கள் உலகம் முழுவதும் பணியில் இருக்கிறார்கள்.

Content moderation

கன்டென்ட் மாடரேட் செய்யும் இவர்களின் மனநலன் மிகவும் முக்கியம். ஆனால், இவர்களின் மனநலனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கண்டுகொள்ளாததுதான் பெரிய பிரச்னை. ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களுக்கு கன்டென்ட மாடரேட் செய்பவர்கள் ஃபேஸ்புக் ஊழியர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்றாம் தர நிறுவனங்களில்தான் பணியில் இருக்கிறார்கள்.

கன்டென்ட் மாடரேஷன் பணிகளில் ஈடுபடுபவர்கள் தாங்கள் என்ன விதமான பணியை மேற்கொள்கிறோம் என்பது பற்றி வெளியே பேசக்கூடாது என்ற விதியும் இருக்கிறது. தரம் பிரிக்கும் பணி என்றவுடன் நிறுத்தி நிதானமாக ஆலோசித்துச் செய்ய வேண்டிய பணி என்று எண்ண வேண்டாம். ஒரு புகைப்படத்தையே, பதிவையோ பார்த்து அதை தரம் பிரிக்க 4.5 நொடிகள்தான் நேரம். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 6000 பதிவுகளைத் தரம் பிரிக்க வேண்டும். அதுவும் துல்லியமாக எந்த வகை எனத் தரம் பிரிக்க வேண்டும்.

ஃபேஸ்புக்கின் கன்டென்ட் மாடரேட்டராக பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கன்டென்ட் மாடரேஷன் பணியை விட்டு விலகியுள்ளார். அந்தப் பணி குறித்த நீண்ட நெடிய பதிவு ஒன்றைச் செய்தியாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கன்டென்ட் மாடரேஷன் பணி குறித்தும் அந்த வேலையைச் செய்பவர்களை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார். ஒரு பதிவைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகும் போது மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கிறார்கள். தங்கள் மனம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த ஆண்டு இதுகுறித்த பிரச்னையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார்கள் முன்னாள் மற்றும் இந்நாள் கன்டென்ட் மாடரேட்டர்கள். மனநலன் மிகவும் பாதிக்கப்படுவதால் 52 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், வேலையின் போது அவர்களது மனநலனை மேம்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஃபேஸ்புக்கிற்கு நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. ஆனாலும் அது தொடர்பான நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படவில்லை.

Content moderation

இந்தியாவிலும் கன்டென்ட் மாடரேஷன் பணிகளில் ஏராளமானோர் ஈடுபடுகிறார்கள். மனநலன் குறித்த விவாதங்களைப் பேச முடிந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே கன்டென்ட் மாடரேஷன் குறித்த பிரச்னைகள் இவ்வளவு இருக்கும் போது, மனநல மருத்துவரிடம் சென்றாலே 'மனநலம் பிறழ்ந்தவர்' என முத்திரை குத்தும் இந்தியா போன்ற நாடுகளில் அவர்களின் நிலை இன்னும் மோசம்.

'காலையில் 9 மணிக்கு வேலைக்குப் போய் கம்யூட்டர ஆன் பண்ணா, தலை துண்டிக்கப்பட்ட படம் ஒண்ணு கண்ணு முன்ன வந்து நிக்கும். அங்க இருந்து ஆரம்பிக்கும் கன்டென்ட் மாடரேஷன்' இப்படித்தான் விவரிக்க வேண்டும் அவர்களது நிலையை!Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.