Header Ads Widget

Responsive Advertisement

அப்டேட்களை அள்ளித் தந்த ஆப்பிள்... `Spring Loaded' ஈவென்ட்டின் ஸ்பெஷல் அறிவிப்புகள் என்ன?

ஆப்பிள் ரசிகர்கள் அனைவரும் நேற்று செம குஷியில் இருந்திருப்பார்கள். ஆப்பிளின் 'ஸ்ப்ரிங் லோடட்' (Spring Loaded) நிகழ்வு நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றதுதான் காரணம். ஒரு ஆப்பிள் சாதனம் வெளியானாலே குஷியாகும் ஆப்பிள் ரசிகர்களுக்கு கைநிறைய அப்டேட்களை அள்ளித் தந்தால் வேண்டாம் என்றா கூறுவார்கள். கொரோனா பரவல் காரணமாக முழுமையான ஆன்லைன் நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது இந்த ஸ்பிரிங் லோடட் நிகழ்வு. நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட சாதனங்களின் பட்டியல் இதோ!

பொதுவாக ஐபோன்களை செப்டம்பர் மாதம் நடக்கும் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்துவதுதான் ஆப்பிள் வழக்கம். அதனால் நேற்றைய நிகழ்வில் ஐபோன் பற்றி எந்த அறிவிப்பும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் ரசிகர்களுக்கு ஒரு குட்டி சர்ப்ரைஸ் வைத்திருந்தது ஆப்பிள். கடந்த வருடம் வெளியான ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகிய மாடல்களின் பர்பிள் கலர் வேரியன்டை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ஏற்கெனவே பல வண்ணங்களில் ஐபோன் வெளிவருகிறது என்றாலும் இந்த நிறம் பார்க்க ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கிறது!

Purple iPhone

கடந்த ஆண்டிலிருந்தே ஆப்பிள் 'ஏர்டேக்ஸ்' என்ற சாதனத்தை அறிமுகப்படுத்தப்போகிறது என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இறுதியாக நேற்றுதான் 'ஏர்டேக்ஸை' மக்கள் கண்ணில் காட்டியது ஆப்பிள். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

AirTags

அதிகமாகப் பயணம் செய்பவர்களும் பொருட்களை ஆங்காங்கே மறந்து வைத்துவிடுபவர்களுக்கும் பயன்படும் விதமாக ஏர்டேக்ஸை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். வட்ட வடிவில் குட்டியாக இருக்கும் இதனை நம் பைகளுடன் சேர்த்து வைத்துக் கொண்டால், பைகள் தொலைந்தாலும் இந்த டேக்குகள் மூலம் அது எங்கிருக்கிறது எனக் கண்டுபிடித்துவிடலாம். ப்ளூடூத்தில் இயங்கும் இதனை ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் 'Find my' செயலி மூலம் பயன்படுத்தலாம். ஒரு ஏர்டேகின் விலை 3190 ரூபாய்.

டிவி என்றதும் டிவி ஒன்றை ஆப்பிள் அறிமுகப்படுத்திவிட்டதா என ஷாக் ஆக வேண்டாம். அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், MI டிவி பாக்ஸ் போன்று இதுவும் சாதாரண டிவியை ஸ்மார்ட் ஆக்கும் ஒரு டிவி கன்சோல்தான். ஏற்கெனவே சந்தையில் இருக்கும் ஆப்பிள் டிவி 4K-ன் அப்டேடட் வெர்ஷன்தான் இது. உள்ளே இருக்கும் சிப், Dolby Vision சப்போர்ட், புதிய ரிமோட் என சில விஷயங்கள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கின்றன.

இதனுடன் வெளிவரும் மறுவடிவம் செய்யப்பட்ட சிரி ரிமோட்டை தனியாகவும் வாங்கலாம். இதன் விலை ரூ.5,800. முந்தைய ஆப்பிள் டிவி கன்சோல்களையும் இது சப்போர்ட் செய்யும்.

Apple TV 4K

கடந்த ஆண்டு இறுதியில்தான் இன்டெல் புராசஸர்களை கழட்டிவிட்டு அதன் சொந்த புராசஸர்களுக்கு மாறியது மேக். ஆப்பிளின் புதிய M1 சிப்புடன் மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர் என இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக M1 சிப்பில் இயங்கும் ஒரு டெஸ்க்டாப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்வே அதற்கானதாகதான் இருக்கும் எனக் கருதப்பட்டது. எதிர்பார்த்தது போலவே நேற்று புதிய ஐமேக்கை வெளியிட்டது ஆப்பிள்.

iMac 2021

M1 சிப் பொருத்தப்பட்டுள்ள இது ஆப்பிளின் முந்தைய ஐமேக் ப்ளாக்ஷிப் மாடல்களை விட 85 சதவிகிதம் வேகமாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். ஐபேட், ஐபோன்கள் போல இம்முறை பல வண்ணங்களில் வெளிவருகிறது ஐமேக். மே மாத இறுதியில் இது விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.

iPad pro

மேக் கணினிகளில் ஹிட்டடித்த M1 சிப் பொருத்தப்பட்ட புதிய ஐபேட் ப்ரோ மாடலையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். M1 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், முந்தைய மாடலை விட இது 50 சதவிகிதம் வேகமாக இருக்குமாம். 5G சப்போர்ட், USB 4 சப்போர்ட் மற்றும் 12 MP Ultrawide செல்ஃபி கேமரா ஆகிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய ஐபேட் ப்ரோ.

Apple Podcast app

இன்று பாட்காஸ்ட்கள் பிரபலமாகத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாக மறுவடிவம் செய்யப்பட்ட பாட்காஸ்ட் செயலியையும் நேற்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். சப்ஸ்கிரிப்ஷன் தொகை கட்டி பயன்படுத்தும் சேவையையும் கொண்டுவந்திருக்கிறது. இதில் விளம்பரங்களற்ற சிறந்த அனுபவத்தைப் பயனர்கள் பெற முடியும் என்கிறது ஆப்பிள். 170 நாடுகளில் இருக்கும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சந்தா சேவை கிடைக்கவிருக்கிறது. இந்தியாவில் சந்தா விலை என்ன என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த ஆப்பிள் ஈவென்ட்டில் உங்களை கவர்ந்த அறிவிப்பு எது... கருத்துகளை கமென்ட்களில் தெரிவியுங்கள்!


Post a Comment

0 Comments