தளங்களின் பயனர் எண்ணிக்கை இன்னும் வளர்ச்சியடையும்... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்!

கொரோனாவின் இரண்டாவது அலையைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மீண்டும் வீட்டிற்குள்ளேயே அதிக நேரம் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது. சென்ற ஆண்டும் கொரோனாவினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இணையதள சேவைகள் அதிகளவில் புதிய பயனர்களைப் பெற்றன. முக்கியமாக வீடியோ OTT தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றவை பயனர் எண்ணிக்கையில் அதிகளவில் வளர்ச்சி கண்டன.

Netflix

தற்போது இரண்டாவது அலையினால் ஏற்படும் ஊரடங்கைத் தொடர்ந்து ஓடிடி ப்ளாட்பார்ம்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் 20 - 30 சதவிகிதம் வரை உயரக்கூடும். இதனை மனதில் வைத்து பல்வேறு வகையான ஓடிடி தளங்களும், தங்கள் பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. சென்ற ஆண்டு போல் நாடு தழுவிய ஊரடங்காக இல்லாமல், நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. எனவே, மொழிவாரியான உள்ளடக்கங்களுக்கு வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

கொரோனா காலத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் மொபைல் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அந்தப் பயனர்களை தங்கள் சேவைகளைப் பயன்படுத்த வைக்கும் நோக்கோடு மொழிவாரியான உள்ளடக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன ஓடிடி தளங்கள்.

உலகளவில் பயன்படுத்தப்படும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்கள் மற்றும் நாடுமுழுவதும் பயன்படுத்தப்படும் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களைத் தாண்டி மொழிவாரியான ஓடிடி தளங்களும் இந்த ஊரடங்குக் காலத்தில் அதிகளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. Hoichoi (பெங்காலி), Aha (தெலுங்கு), Koode, NeeStream (மலையாளம்), ALTBalaji போன்ற இந்தியாவின் பல தளங்களும் இந்த ஊரடங்கு காலத்தில் அதிக பயனர்களையும், பார்வையாளர்களையும் பெற்றிருக்கின்றன.
OTT ஸ்ட்ரீமிங் தளங்கள்

உலகளாவிய ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகிய தளங்கள் தென்னிந்திய மொழிகளில் உள்ளடக்கங்களைத் தயாரிப்பதைக் கடந்து தென்னிந்திய மொழிப் படங்களின் உரிமைகளையும் திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே கைப்பற்றுகின்றன. கடந்த ஆண்டில் நிறைய தமிழ்ப் படங்களின் உரிமைகளை அமேசான் ப்ரைம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், திரைப்படங்களில் வெளியாகும் படங்களைத் தொடர்ந்து ஓடிடி-யிலேயே நேரடியாக வெளியாகும் படங்களும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் அதிகரித்திருக்கிறது.

Post a Comment

0 Comments