Header Ads Widget

Responsive Advertisement

மீண்டும் இந்தியாவில் பப்ஜி? அறிவித்த கிராஃப்டன் நிறுவனம்!

இந்திய இளைஞர்களை மிகவும் கவர்ந்த மொபைல் கேமான பப்ஜி கடந்த ஆண்டு இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அந்தத் தடை நீங்கும் என நம்பிக்கையோடு பல மாதங்களாக காத்திருக்கின்றனர் இந்திய பப்ஜி ரசிகர்கள். ஆனால், தற்போதுவரை அந்தத் தடையானது நீங்கியதாக இல்லை. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பப்ஜி தொடர்பான பணிகளுக்கு ஆட்கள் தேவை என அந்த கேமின் வடிவமைப்பு நிறுவனம் லிங்க்ட்-இன் தளத்தில் பதிவு செய்திருந்தது. 'அப்போ திரும்ப பப்ஜி வருதா!' எனக் குஷியானார்கள் இந்திய மொபைல் கேமர்கள். அதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன் பப்ஜி என்ற பெயர் இல்லாமல் வேறு ஒரு பெயரில் பப்ஜி கேமின் போஸ்டர்கள் சில இணையத்தில் வைரலாகின.

Battlegrounds Mobile India

'Players Unknown Battleground' (PUBG) என்ற பெயரில்லாமல், 'Battlegrounds Mobile India' என்ற பெயரில் புதிய கேமை இந்தியாவில் வெளியிட இருக்கிறது கிராஃப்டன் (Krafton) நிறுவனம். சீன நிறுவனமான டென்சென்ட் உடன் இணைந்து விநியோகம் செய்ததாலேயே இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டது. தற்போது டென்சென்ட்டை கழட்டிவிட்டு தனியாக இந்தியாவில் இந்தப் புதிய விளையாட்டை அறிமுகம் செய்யவிருக்கிறது கிராஃப்டன் நிறுவனம். தடைக்கு முன்பு உலகில் அதிகளவு பப்ஜி பயனர்களைக் கொண்ட நாடாக இருந்தது இந்தியா.

பப்ஜி தடைசெய்யப்பட்டதுமே இந்திய மார்க்கெட்டைப் பிடிக்க பல பேட்டில் ராயல் கேம்கள் போட்டிப்போட்டன. அதே போன்று இந்திய நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட விளையாட்டான ஃபாஜி (FAU-G) வெளியிடப்பட்டது. பப்ஜி அளவிற்கு இல்லை என ஃபாஜிக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வந்தன.


Battlegrounds Mobile India

இப்போது இந்தியாவை மட்டுமே குறிவைத்து இந்த புதிய கேம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியப் பயனர்களைக் கவரும் வண்ணம் இந்த புதிய கேம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கேமிற்காக சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் யாவும் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு இங்கேயே சேமிக்கப்படும், வெளிநாடுகளுக்குச் செல்லாது எனவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

எப்போது இந்தப் புதிய மொபைல் கேம் வெளியாகும் என அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், கூடிய விரைவில் அனைவரும் இந்த கேமை ஆடலாம் என்று அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. 'கெட் ரெடி கேமர்ஸ்'..!



Post a Comment

0 Comments