Header Ads Widget

Responsive Advertisement

AirTag: இந்த ஆப்பிளில் தேடினால் தொலைந்ததெல்லாம் கிடைக்குமா?!

‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தில் ரஜினி வேட்டியை மறந்து பட்டா பட்டி டிரவுசருடன் வீதியில் இறங்கி நடந்து போவார். அதேபோல மறதியின் உச்சக் கட்டமாக மூக்கு மேல் போட்டிருக்கும் கண்ணாடியையே மறந்து தேடும் ஆசாமிகள் கூட நம்மத்தியில் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் வயதானவர்களுக்குத்தான் மறதி ஏற்படும். ஆனால், எல்லாமே ஹைடெக்காக போய்விட்ட இந்த நவீன யுகத்தில் நாம் எல்லாருமே மறதி நோயாளிகளாகத்தான் அலைகிறோம். கையில் உள்ள மொபைல் ஃபோனைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை என்பதாலோ என்னவோ அதற்கு மருந்தாக வந்துள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்டேக் (Apple AirTag). ஏற்கெனவே இதுபோன்ற கருவிகளை பல சைனீஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துவதனாலேயே இது உலக சந்தையில் மிகப்பெரிய கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது.

Apple AirTag
தன் Find My அமைப்பை விரிவுபடுத்தி, நாம் மறந்து தவறவிடும் மிகவும் முக்கியமான பொருள்களை எளிதாகக் கண்டுபிடிப்பதற்கான தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான வழியை, ஐபோன் துணையோடு கண்டுபிடிக்கும் ஏர்டேக் கருவியை கடந்த சில நாள்களுக்கு முன்னர் விற்பனைக்குக் கொண்டுவந்தது ஆப்பிள்.

Find My app மூலமாக, முக்கியமான பொருள்களைக் கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும், ஆப்பிள் நிறுவனத்தால் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய துணைக் கருவியே இது. நாம் அடிக்கடி மறக்கும் அல்லது தொலைந்து போகாமல் பாதுகாக்க நினைக்கும் பொருள்கள் எதிலும் இதை இணைத்து விட முடியும். அது ஹேண்ட்பேக்கோ, வீடு அல்லது வாகனங்களின் சாவியோ, முக்கியமான ஆவணங்கள் அடங்கிய ஒரு பையோ, இல்லை நம் வீட்டு நாய்க்குட்டியோ எதில் வேண்டுமானாலும் இதை இணைத்துவிட்டால், அடுத்த முறை மறந்து விட்டு தேடும் போதோ இல்லை தொலைந்து போகும் போதோ இது கண்டுபிடித்துக் கொடுத்து விடும்.

இதில் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் end-to-end encryption- முறையில் பாதுகாக்கப்படுகின்றன. எனவே நாம் எவ்வளவு தூரம் மறதியுள்ள ஆசாமி என்பதும், எதையெல்லாம் மறந்துவிட்டு தேடுவோம் என்பதுபோன்ற விஷயங்களும் ரகசியமாக வைக்கப்படும். இருந்தாலும் குழந்தைகளைக் கண்காணிக்க இந்த கருவியை ஆப்பிள் நிறுவனம் சிபாரிசு செய்யவில்லை. அதற்கு மாற்றாக ஆப்பிள் வாட்ச்களைப் பயன்படுத்த சொல்கிறது.

பளபளப்பான வெள்ளை நிற பிளாஸ்டிக் முகப்பையும், சில்வர் பின்புற மூடியையும் கொண்ட இது ஒரு சிறிய, பட்டன் வடிவ சாதனமாகும். ஒவ்வொரு AirTag-ம் புளூடூத் வழியாக iOS மற்றும் macOS சாதனங்களுடன் இணைக்கப்படும். இதன் replaceable CR2032 batteries காரணமாக இவற்றை சார்ஜ் செய்யும் அவசியம்கூட இல்லை.
Apple AirTag

Find My ஆப்பில் காட்டப்படும் ஏர்டேக்குகளின் லொகேஷனை வைத்து அதன் இருப்பிடத்தை நீங்கள் கண்டுபிடிக்கலாம். இதில் இணைக்கப்பட்டுள்ள U1 சிப் மூலம் உங்கள் ஏர்டேக், வீட்டினுள் அல்லது அருகில் இருந்தால் அதன் துல்லியமான இருப்பிடத்தையும், அப்படி இல்லாத பட்சத்தில் அதன் கடைசியாக அறியப்பட்ட இருப்பிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலமாக தொலைந்த ஏர்டேக்கைக் கண்டுபிடிக்க Siri மூலமாக ஏர்டேக்கில் பீப் ஒலியை எழுப்ப முடியும். அல்லது Find My App மூலமாகவும் ஒலியை எழுப்ப முடியும். ஒரு ஏர்டேக் அதன் உரிமையாளரிடமிருந்து மூன்று நாள்களுக்கு மேல் பிரிந்து இருந்தால், அதன் பின் ஒவ்வொரு முறை அது நகரும் போதும் அதன் இருப்பைப் பற்றி எச்சரிக்கை அலெர்ட் ஒலி எழுப்பிய வண்ணம் இருக்கும்.

நீங்கள் ஒரு தொலைந்த ஏர்டேக்கை கண்டு பிடித்தாலோ அல்லது உங்கள் தொலைந்த ஏர்டேக்கை வேறு யாரேனும் கண்டெடுத்தாலோ அதன் NFC (Near Field Communication technology) தொழில்நுட்பம் மூலமாக எந்தவொரு ஸ்மார்ட்போன் மூலமும் அதனை ஸ்கேன் செய்து பார்த்து அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்கலாம்.

அதேவேளை உங்கள் ரகசியமும் இந்த முறையில் இலகுவில் களவாடப்படலாம். உங்களுக்குத் தெரியாமல் வேறு யாராவது உங்கள் பையில் அல்லது காரில் ஏர்டேக்கை போட்டுவிட்டால், நீங்கள் செல்லும் எல்லா இடங்கலும் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவீர்கள்.

AirTags

ஆனால், இதற்கும் ஓர் எச்சரிக்கை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம் என்கிறது ஆப்பிள் நிறுவனம். சந்தேகத்துக்கிடமான கண்காணிப்புகள் பற்றிய எச்சரிக்கையை தெரிவிக்க பீப் ஒலியுடன் கூடிய எச்சரிக்கை அலாரமை AirTag கருவிக்குள் ஆப்பிள் நிறுவனம் அமைத்துள்ளது. அதாவது சந்தேகத்துக்கிடமான AirTag கருவி உங்கள் காருக்குள்ளேயோ அல்லது உங்கள் உடைமைகளுக்கு இடையேயோ ஒளித்து வைத்திருக்கப்படும் பட்சத்தில் அது பற்றி உங்கள் ஐபோனில் warning மெசேஜ் காட்டப்படும். ஆனால் ஆண்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பவர்கள் கதி அதோ கதிதான்.

தொழில்நுட்ப வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் வளர்ந்து கொண்டே போகிறது. மனித சமூகத்தை நாளுக்கு நாள் அதன் அடுத்த கட்ட முன்னேற்ற நகர்வுக்கு இது அழைத்துச் சென்றாலும் அது சார்ந்து பெருகும் குற்றங்களின் விகிதாச்சாரமும் கூடிக்கொண்டேதான் போகின்றன.

இவ்வாறான புதிய ஹைடெக் சாதனங்கள் அறிமுகமாகும் போது எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாகவும் முன்னேற்றமாகவும் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது நன்று!

Post a Comment

0 Comments